இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயில் தயாரிப்பு இறுதிக்கட்டத்தில்! மணிக்கு 280 கி.மீ. வேகம், 557 பயணிகள் பயணம் செய்யும் வசதி!
இந்தியாவின் அதிவேக ரயில் போக்குவரத்து வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் புல்லட் ரயிலான B28 தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
2026 நவம்பர் 1ஆம் திகதி பெங்களூருவில் உள்ள BEML நிறுவனத்தின் தயாரிப்பு நிலையத்திற்குச் சென்ற இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயிலின் தயாரிப்பு முன்னேற்றத்தைப் பார்வையிட்டுள்ளார்.
B28 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிவேக ரயில் மும்பை – அகமதாபாத் இடையிலான 508 கிலோமீற்றர் அதிவேக ரயில் பாதையில் இயக்குவதற்காக வடிவமைக்கப்படுகிறது.
இந்த ரயில் சோதனையின்போது மணிக்கு 280 கிலோமீற்றர் வேகத்தை எட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், வழக்கமான பயணச் சேவையில் மணிக்கு சுமார் 249 கிலோமீற்றர் வேகத்தில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 202 மீற்றர் நீளமுடைய இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இடம்பெறவுள்ளன.
அவற்றில் ஏழு பெட்டிகள் சாதாரண வகுப்பிற்கும் ஒரு பெட்டி உயர்வகுப்பிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் சுமார் 557 பயணிகள் பயணிக்க முடியும். பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட பெட்டிகள், நவீன இருக்கைகள், Wi-Fi மூலம் பொழுதுபோக்கு வசதிகள், மின்னணுத் தகவல் திரைகள், கைப்பேசி மின்னேற்றும் வசதிகள் மற்றும் நவீன கழிப்பறைகள் அமைக்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளிகளும் எளிதாகப் பயணம் செய்யும் வகையில் சக்கர நாற்காலிகளுக்கான வசதிகள், சிறப்பு இருக்கைகள், அவர்களுக்கான கழிப்பறைகள் மற்றும் பிரெயில் எழுத்து வழிகாட்டிகளும் வடிவமைப்பில் இடம்பெற்றுள்ளன.
மேலும், ரயிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அதன் வெளிப்புறக் கட்டமைப்பு கடுமையான அழுத்தங்களைத் தாங்குமா என்பதை மதிப்பிடும் Squeeze Test எனப்படும் பாதுகாப்புச் சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து இயந்திர இயக்க அமைப்புகள் பொருத்தப்பட்டு, வெப்பநிலை மற்றும் காலநிலைச் சோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
முதற்கட்டமாக மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் பாதையின் சூரத் – வாபி இடையிலான சுமார் 97 கிலோமீற்றர் பகுதியைச் சேவைக்குக் கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்தப் பகுதியில் 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் வர்த்தகப் பயணச் சேவையை ஆரம்பிப்பதே இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ரயிலின் முன்மாதிரி தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதுவரை அதிவேக ரயில் தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு உதவியைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது தனது சொந்த நாட்டிலேயே புல்லட் ரயில் தயாரிக்கும் முயற்சியில் முன்னேறியுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் ரயில்வே தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

