ஜேர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி!
நெதர்லாந்தின் ‘ஹில்வர்சம்’ (Hilversum) நகரிலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானமொன்று,
ஜேர்மனியின் ‘கெர்டெராத்’ (Gerderath) பகுதிக்கு அருகே இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை நெதர்லாந்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், நெதர்லாந்து எல்லைக்கு அருகாமையிலுள்ள ஜேர்மனியின் ‘
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா’ (Rhénanie-du-Nord-Westphalie) மாநிலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விமானம் அதிவேகமாகக் கீழே வந்து வயல்வெளியொன்றில் மோதி
விபத்துக்குள்ளானதை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த மூவர் மட்டுமே விமானத்தில் பயணித்திருந்ததாக உள்ளூர்க் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விபத்துக்கான துல்லியமான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. எனினும், கடந்த சில நாட்களாக இந்த விமானம் பல பயணங்களை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஜேர்மனிய அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவதற்காக,
நெதர்லாந்தின் பாதுகாப்பு விசாரணைப் பணியகத்தைச் (Onderzoeksraad voor Veiligheid) சேர்ந்த இரு அதிகாரிகள் விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

