இத்தாலியில் ‘முன்னணி சொகுசு ஆடை நிறுவனங்களின் பின்னால் பதுங்கியுள்ள இருண்ட முகம்!

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் (Luxe à bas coûts), உலகப் புகழ்பெற்ற சொகுசு ஆடை நிறுவனங்கள் சீனத் தொழிலாளர்களைக் (Ouvriers chinois) கொத்தடிமைகளாகச் சுரண்டுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு ஐரோப்பியத் தொழில்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இத்தாலியக் காவல்துறையினர் ‘சானல்’ (Chanel), ‘பல்கேரி’ (Bulgari) உள்ளிட்ட 11 முன்னணி நிறுவனங்களின் தலைமையகங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
மிலன் (Milan) நகரத் தலைமை வழக்குரைஞர் (Procureur) பாவ்லோ ஸ்டோரேரி (Paolo Storari) இந்த அதிரடிச் சோதனைகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விசாரணையின் பிடியில் சிக்கியுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு:
சானல் (Chanel)
பல்கேரி (Bulgari)
எட்ரோ (Etro)
ப்ருனெல்லோ குசினெல்லி (Brunello Cucinelli)
மாங்க்லர் (Moncler)
ஜேக்கப் கோஹன் கம்பெனி (Jacob Cohen Company)
ஓவன்ஸ்கார்ப் இத்தாலியா (Owenscorp Italia)
கோயார்ட் இத்தாலி (Goyard Italie)
எஃப்.விஐ (F.Vl)
ஸ்டெபானோ ரிச்சி (Stefano Ricci)
பிராண்டார்ட் (Brandart)
இத்தாலியத் தையல் ஆலைகளில் நடைபெறும் சம்பள மற்றும் பணி விதிமீறல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் மிலன் நகரத் தலைமை வழக்குரைஞரின் இந்த மாபெரும் விசாரணை, கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியிலேயே ‘பிராடா’ (Prada), ‘கிவென்சி’ (Givenchy), ‘டோல்ஸ் அண்ட் கபானா’ (Dolce & Gabbana) உள்ளிட்ட 13 சொகுசு நிறுவனங்கள் மீது முடுக்கிவிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது சோதனையின் வலை மேலும் விரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் நேரடியாகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தாமல், துணை ஒப்பந்ததாரர்களைப் (Sous-traitants) பயன்படுத்தி ஆடைகளைத் தயாரிப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தத் துணை நிறுவனங்கள், தொழிலாளர் உரிமைகளுக்கு (Droit du travail) முற்றிலும் புறம்பான வகையில் சீனத் தொழிலாளர்களைக் கடுமையான பணி நிலைமைகளில் கட்டாயப்படுத்துவது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், இவர்களில் பல தொழிலாளர்கள் வாழத் தகுதியற்ற, மிகவும் சுகாதாரமற்ற ஒடுங்கிய தங்குமிடங்களிலேயே (Logements insalubres) அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பாக, காஷ்மீர் (Cachemire) ஆடைகளுக்குப் புகழ்பெற்ற ‘லோரோ பியானா’ (Loro Piana) உள்ளிட்ட சில உயர்தர நிறுவனங்கள், தங்களின் துணை ஒப்பந்ததாரர்களின் ஆலைகளில் நிலவிய மோசமான சூழல் காரணமாக, இத்தாலிய நீதிமன்ற நிர்வாகத்தின் (Administration judiciaire) தற்காலிகக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தன.
பின்னர், தங்களின் விநியோகச் சங்கிலியில் (Chaîne d’approvisionnement) கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதாக அந்நிறுவனங்கள் உறுதியளித்த பின்னரே அந்தத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
ஒருபுறம் காவல்துறையும் நீதிமன்றமும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மறுபுறம் இத்தாலியத் தொழில்துறை அமைச்சர் அடோல்போ உர்சோ (Adolfo Urso) கடந்த ஆண்டு இந்த முன்னணி நிறுவனங்களுக்கு ஆதரவாகவே குரலெழுப்பியிருந்தார்.
“இத்தாலியில் தயாரிக்கப்பட்டது (Made in Italy) என்ற நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என அவர் அப்போது வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin