பிரான்ஸ் ஒரு வல்லரசு :ஆனால் தீயணைப்பு விமானங்களுக்கு தட்டுப்பாடு !

இந்தக் கோடைகாலத்தின் தொடக்கத்திலிருந்தே பிரான்சில் (France) பல இடங்களில் பரவி வரும் காட்டுத்தீ, தற்போது பயன்பாட்டில் உள்ள Canadair தீயணைப்பு விமானப் படையின் முதுமையையும் பலவீனத்தையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

குறிப்பாக, சமீபத்தில் ஃபொன்டன்ப்ளோ (Fontainebleau) வனப்பகுதியில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தின் போது, இருப்பில் உள்ள விமானங்களில் 60 விழுக்காடு மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்த நிலையில் இருந்தன என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நெருக்கடிக்கு ஒரு நிரந்தரத் தீர்வாக உருவெடுத்துள்ளதுதான், ‘ஹைனேரோ’ (Hynaero) நிறுவனம் முன்னெடுக்கும் புதிய தீயணைப்பு விமானமான ‘பிரிகேட்’ (Frégate). இது குறித்த விரிவான திட்டங்களை அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் ஊடகத்திற்குப் தெரிவி த்துள்ளார்.

“உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காட்டுத்தீ அபாயங்களுக்கு ஒரு நவீனமான, சிறப்பான மற்றும் பாதுகாப்பான தீர்வை வழங்க நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறும் ஹைனேரோ’ (Hynaero) நிறுவனம் , இந்த ‘பிரிகேட்’ விமானத்தின் சிறப்பம்சங்களைப் பின்வருமாறு விளக்குகிறது

இது தற்போதைய Canadair விமானங்களின் அதே விலையில், இருமடங்கு திறன் கொண்டதாக ‘பிரிகேட்’ இருக்கும்.
இது அதிக நீரைச் சுமந்து செல்லும் வல்லமை கொண்டது.

அதிவேகமாகப் பறந்து சென்று, மிகத் துல்லியமாக நீரை உமிழும் (Largages) திறன் பெற்றிருப்பதால், தீயை அணைப்பதில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும்.

1960-களில் வடிவமைக்கப்பட்ட Canadair விமானங்களைப் போலல்லாமல், இதில் ‘செயற்கை நுண்ணறிவு’ (Intelligence artificielle) தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

இது, தீயை அணைப்பதற்கான முன்னுரிமைப் பாதைகளை (Axes d’attaque prioritaires) மிகத் துல்லியமாகக் கணிக்க உதவும்.

இந்த விமானம் சிறப்பானது என்றாலும், இது உடனடியாகப் பயன்பாட்டிற்கு வந்துவிடாது. இந்த விமானத்தை முழுமையாக வடிவமைக்க 6 முதல் 8 ஆண்டுகள் வரை ஆகும் என்றும், இதற்காக ஒரு பில்லியன் யூரோக்களுக்கு (Milliard d’euros) மேல் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பலகட்ட நிதி திரட்டல்களுக்குப் (Levées de fonds) பிறகு, 2032-ஆம் ஆண்டின் இறுதியில்தான் (Fin 2032) இது அதிகாரப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

இந்த மாபெரும் திட்டத்தை விரைவுபடுத்த ‘ஏர்பஸ்’ (Airbus) மற்றும் ‘வின்சி’ (Vinci) போன்ற பெருநிறுவனங்களுடன் ‘ஹைனேரோ’ கைகோர்த்துள்ளது. “இது பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய இறையாண்மையின் (Souveraineté franco-européenne) ஒரு முக்கியப் பகுதியாகும்.

பிரான்சு, இத்தாலி, கிரேக்கம் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தீயணைப்பு வீரர்களின் களத் தேவைகளைக் கேட்டறிந்தே இதனை வடிவமைத்து வருகிறோம்,” என ஹைனேரோ’ (Hynaero) நிறுவனம் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது .

புதிய ‘பிரிகேட்’ விமானம் வானில் சீறிப்பாய இன்னும் குறைந்தது ஆறு கோடைகாலங்களைக் (Étés) கடக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காட்டுத்தீ வனங்களைச் சூறையாடி வரும் நிலையில், அரசாங்கத்தின் தயக்கங்களும் பேசுபொருளாகியுள்ளன.

தொடக்கத்தில் நான்கு புதிய கனடேர் விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருந்த அரசாங்கம், தற்போது இரண்டை மட்டுமே கொள்முதல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை 2025-இல் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் டேமியன் மாடெட் (Damien Maudet) மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் சோஃபி பான்டெல் (Sophie Pantel) ஆகியோர் சமர்ப்பித்த அறிக்கையில் ஒரு திடுக்கிடும் தகவல் இடம்பெற்றிருந்தது.

அதன்படி, பிப்ரவரி 21, 2024-இல் வெளியிடப்பட்ட ஒரு அரசாணையின் (Décret) மூலம் சிவில் பாதுகாப்புக்கான (Sécurité civile) சுமார் 53 மில்லியன் யூரோக்கள் நிதி இரத்து செய்யப்பட்டுள்ளது.

நேரடியாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், மீதமுள்ள இரண்டு கனடேர் விமானங்களின் கொள்முதலை முடக்கியதே இந்த நிதி ரத்துக்கான காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin