2026 ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியை வழிநடத்தவுள்ள முக்கிய நடுவர் ஸ்லாவ் கோ வின்சிச் (Slavko Vincic) குறித்து ஒரு பழைய சர்ச்சை மீண்டும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
ஸ்லோவேனியாவைச் சேர்ந்த நடுவர் ஸ்லாவ் கோ வின்சிச், 2020-ஆம் ஆண்டு மே மாதம் போஸ்னியா மற்றும் ஹெர்ஸகோவினாவில் ஒரு போலீஸ் நடவடிக்கையின் போது தற்காலிகமாகத் தடுத்து வைக்கப்பட்டார்.
ஒரு தொழில்முறை பயணத்திற்காக அங்கு சென்றிருந்த அவர், ஒரு வணிக மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டார். துரதிர்ஷ்டவசமாக, அந்த இடத்தில் போதைப்பொருள் மற்றும் விபச்சார கும்பல் தொடர்பாக போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அவரும் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.
விசாரணையின் முடிவில், அவருக்கு அந்தக் குற்றங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்பது உறுதியானது. அவர் ஒரு சாட்சியாக மட்டுமே விசாரிக்கப்பட்டார், எவ்விதத் தவறும் செய்யவில்லை என நிரூபிக்கப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
அவர் எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டதால், தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில், தற்போது நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தச் செய்தி மீண்டும் வைரலாகி வருவதால், அவர் மீது எவ்விதத் தவறும் இல்லை என்பதை விளக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

