நயினாதீவின் நன்னீர் வளம் தொடர்பில் வஸ்பர் குழுவினரிடம் அக்கறையுடன் கருத்துரைத்த பொதுமக்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் மக்கள் மயப்படுத்தப்பட்ட நீர்வள பாதுகாப்பு முயற்சியின் வஸ்பர் (WASPAR) ஒரு பகுதியாக நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பயணமானது மூன்றாவது தடவையாக 09.07.2026 வியாழக்கிழமை முழுநாள் களப்பயணமும், கலந்தாய்வும் இடம்பெற்றது.

பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா தலைமையில் வஸ்பர் குழுவைச் சேர்ந்த ஆறு ஆய்வு மாணவர்களோடு மேற்படி பயணத்தில் மக்களுக்கும் நீருக்கும் இடையிலான ஊடாட்டத்தை பரந்த பார்வையில் பார்க்கின்ற சமூக நீரியல் என்கிற அறிவியல் கோட்பாட்டின் மூலகர்த்தாவான அமெரிக்காவின் இல்லினோஸ் பல்கலைக்கழகத்தின் சமூக நீரியல் துறையின் பேராசிரியர் முருகேசு சிவபாலன் அவர்களுடன் சென்று நயினாதீவின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடலில் ஈடுபட்டனர்.

காலையில் நயினாதீவு மகாவித்தியாலய பாடசாலை சமூகத்தோடும், மதியம் தென்பகுதி மலையடி மீனவர் சங்கத்தினருடனான உரையாடலோடும், மாலை முதலாம் வட்டார வல்லிக்காடு மீனவர் சமூகத்தினருடன் மக்களை ஈடுபடுத்திய உரையாடலோடும் பல்வேறு நீர்சார்ந்த அனுபவ பகிர்வுகளை பெற்றுக் கொண்டனர்.

வல்லிக்காடு, காளி கோவிலடி, காட்டுக் கந்தசாமி கோவிலடி, தீர்த்தக்கரை பக்கமுள்ள பெருங்கிணறுகளின் நீரின் உவர்தன்மை, நீரின் இயல்பு குறித்த தரங்களையும் ஆய்வு செய்ததோடு, அங்குள்ள மக்களோடும் கலந்துரையாடினர்.

கடல் நீர் நன்னீராக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள நீரின் தொடர்ச்சியான வழங்கலில் ஏற்பட்டுள்ள தடையினால் ஏமாற்றமடைந்திருந்த மக்கள், பழுதடைந்திருந்த இயந்திரத்தின் திருத்தத்தின் பின்னர் நீர் வரத் தொடங்கியிருந்தாலும் போதிய அளவு நீர் வரவில்லை என்கிற ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்பையும் ஆய்வு மாணவர்களிடம் தெரிவித்திருந்தனர்.

சில பகுதிகளில் நெடுங்காலமாக நன்னீர் பெற்று வந்த கிணறுகள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமோ என்கிற பயம், உவர்நீராகும் ஆபத்து போன்ற நம்பிக்கையீனங்களையும், ஆதங்கங்களையும் மக்கள் இதன் போது வெளியிட்டிருந்தார்கள்.

நீரின் நெருக்கடியை புரிந்தவர்களாக குழாயில் நீர் வருவதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொண்டு இருக்கின்ற நீர் வளங்களை கைவிடுகின்ற நிலைக்கு ஒரு நாளும் போகமுடியாது, பாரம்பரியமாக தொடர்ந்து வருகின்ற உண்மையை அவர்களுக்கு மீள வலியுறுத்தி, அதற்கு உகந்தவகையில் பழைய நீர்மூலங்களை அதே நிலையில் பேணுவதற்கான அவர்களுடைய பொறுப்பையும் ஈடுபாட்டையும் வலுவாக தொடர்வதற்கு துணை நிற்போம் என்பதையும் குழுவினர் தெளிவுபடுத்தியிருந்தார்கள்.

அதனை விட குளங்களின் தூர்வாரலுக்காக அரசு ஒதுக்கியிருக்கின்ற புதிய நிதியின் வருகையின் போது பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி அவசரமாக செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக குளத்தை வேகமாக ஆழப்படுத்துகின்ற ஆபத்தான செயற்பாட்டில் ஈடுபடுவதில் அவதானம் தேவை என்பதையும், களிமண்ணை அடித்தளமாக கொண்ட சிறிய குளங்களுக்குள் பெரும் இயந்திரங்களை இறக்குவதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும், அவ்வாறு இழந்த குளங்களின் கதைகள் எம்மிடையே இருக்கின்றன என்பதனையும் பொறுப்புவாய்ந்த அரச அதிகாரிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், கமக்காரர் அமைப்புகள், கிராம சங்கங்கள் கூட்டாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கியிருந்தனர்.

மக்களிடமிருந்து உரையாடல்களின் போது பெற்றுக் கொண்டுள்ள தகவல்களையும் தொகுத்து ஆய்வு செய்து நயினாதீவின் நீர்வளத்தை பாதுகாப்பதற்கான முயற்சிகளை தொடர்வதிலும் வஸ்பர் குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin