பார்முலா 1 பந்தயத்தில் பிரித்தானியா வாழ் ஈழத் தமிழரின் சாதனை – மெர்சிடிஸ் அணியின் வெற்றிக்குப் பின்னால் ஒரு திறமைசாலி!
மெர்சிடிஸ் அணியின் ஆஸ்திரிய கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது, மேடை ஏறி வெற்றியாளர் கோப்பையை ஏந்திய பிரித்தானிய வாழ் ஈழத் தமிழர் அருண் ராஜ்குமாரின் சாதனை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஈழத் தமிழ் குடும்பத்தில் பிறந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் AMG நிறுவனத்தின் அதிநவீன பவர் யூனிட் பிரிவில் டிராாக்சைடு பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
மெர்சிடிஸ் அணியின் பார்முலா 1 கார்களுக்கான மிக முக்கியமான ஹைப்ரிட் என்ஜின்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் சோதனை செய்யும் பணியில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஆஸ்திரியாவின் ஸ்பீல்பெர்க்கில் நடைபெற்ற பந்தயத்தில் ஜார்ஜ் ரஸ்ஸல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மெர்சிடிஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அருண் ராஜ்குமார் மேடை ஏறி கோப்பையைப் பெற்றுக்கொண்டார்.
உலகத்தரம் வாய்ந்த இப்போட்டியில், ஓட்டுநர்களின் திறமைக்கு இணையாக, பின்னணியில் உழைக்கும் பொறியாளர்கள், வியூக வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பைக் கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்தது.
அருணின் இந்த வளர்ச்சி ஒரு நீண்ட பயணத்தின் விளைவாகும். பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்ற இவர், மெர்சிடிஸ் நிறுவனத்தில் ஒரு பயிற்சி மாணவராக தனது பயணத்தைத் தொடங்கினார்.
தயாரிப்பு பொறியியல் மற்றும் சோதனை பொறியியல் துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்ற அவர், தனது திறமையால் இன்று பந்தய களத்தில் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் முக்கியப் பொறியாளராக உயர்ந்துள்ளார்.
மெர்சிடிஸ் அணியின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள நுணுக்கமான தொழில்நுட்ப உழைப்பிற்கு அருண் ராஜ்குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
உலகின் மிகவும் சவாலான விளையாட்டுத் துறைகளில் ஒன்றான பார்முலா 1-ல், தனது விடாமுயற்சியாலும் தொழில்நுட்பத் திறமையாலும் ஒரு ஈழத் தமிழர் இத்தகைய உயரிய இடத்தைப் பிடித்திருப்பது, உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்திற்குப் பெரும் பெருமையைச் சேர்த்துள்ளது.

