மலிவு விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்;

மலிவு விலையில் ஏர் கண்டிஷனர் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்;

பிரான்ஸ் முழுவதும் Lidl கடைகளில் பரபரப்பான காட்சிகள் காவல்துறை தலையீடு!

பிரான்சில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, Lidl நிறுவனம் மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்திய ஏர் கண்டிஷனர்களை வாங்க மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால்,

பல நகரங்களில் கடுமையான தள்ளுமுள்ளு, வாக்குவாதம் மற்றும் காவல்துறை தலையீடு வரை நிலைமை மோசமடைந்தது.

நான்தேர், செயிண்ட்-ஜெர்மேன்-அன்-லே, ஓர்ஜ்வால், செயிண்ட்-ஜெர்மேன்-லே-கோர்பெய், பாரிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சில இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றதால் நுழைவாயில் கதவுகள் சேதமடைந்ததுடன், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏற்பட்ட குழப்பத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும் ஜந்தர்மரி அதிகாரிகளும் தலையிட வேண்டிய சூழல் உருவானது.

பல Lidl கிளைகளில் ஏர் கண்டிஷனர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருந்ததாகவும்,

சில கடைகளில் ஒன்று அல்லது இரண்டு கருவிகள் மட்டுமே கிடைத்ததாகவும், சில கிளைகளுக்கு ஒன்றுகூட வரவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

பாரிஸ் 14-ஆவது வட்டாரத்தில் இரண்டு ஏர் கண்டிஷனர்களுக்காக 400-க்கும் மேற்பட்டோர் காத்திருந்ததாகவும், ஏற்பட்ட குழப்பத்தில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டதாகவும், சில பெண்கள் கீழே விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ய்வலின், ஒ-து-சென் மற்றும் எசோன் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏமாற்றத்துடன் வெறுங்கையுடன் வீடு திரும்பிய மக்கள்,

Lidl நிறுவனம் தேவைக்கேற்ப போதுமான இருப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறியதாக குற்றம்சாட்டினர். சமூக ஊடகங்களிலும் இந்த விற்பனை முறையை பலர் கடுமையாக விமர்சித்து, “ஒரு ஏர் கண்டிஷனருக்காக இவ்வளவு குழப்பம் தேவையா?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரான்சின் கடும் வெப்பநிலையால் குளிரூட்டும் சாதனங்களுக்கான தேவை திடீரென அதிகரித்துள்ள நிலையில், குறைந்த இருப்புடன் நடைபெற்ற இந்த விற்பனை நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Recommended For You

About the Author: admin