உயிரிழப்புகளை அதிகரிக்கும் கதிர்வெம்மையலை: SOS Médecins மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளின் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்!
பிரான்ஸை உலுக்கியெடுத்த கொடிய கதிர்வெம்மையலையின் கோரத்தாண்டவம் குறித்த அதிர்ச்சியூட்டும் மருத்துவ அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. ஜூன் 20 முதல் 28 வரையிலான காலகட்டத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவுகளும், SOS Médecins சேவைகளும் சந்தித்த நெருக்கடிகள் நெஞ்சைப் பதறவைக்கின்றன.
ஜூன் 22 முதல் 28 வரையிலான உச்சக்கட்ட வெப்பத்தின் போது, 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களின் இறப்பு விகிதம் 85 விழுக்காடு அதிகரித்துள்ளதாக SOS Médecins தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், மருத்துவமனைகளின் அவசரச் சிகிச்சைப் பிரிவுகள் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்துள்ளன:
அதீத உடல் வெப்பம் (Hyperthermie): 715 விழுக்காடு உயர்வு.
நீர்ச்சத்தின்மை (Déshydratation): 229 விழுக்காடு உயர்வு.
மயக்கம் மற்றும் சோர்வு (Malaises): 37 விழுக்காடு உயர்வு (மொத்தம் 5,880 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்).
குறிப்பாக, இரண்டு வயதிற்குக் குறைவான பச்சிளங்குழந்தைகள் (13 விழுக்காடு உயர்வு) மற்றும் 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் (11 விழுக்காடு உயர்வு) எனப் பலவீனமான நிலையிலிருப்பவர்களே இந்த வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். SOS Médecins சேவையைப் பொறுத்தவரை, ‘வெப்பத் தாக்குதலுக்கு’ (Coup de chaleur) ஆளானோரின் எண்ணிக்கை 480 விழுக்காடும், நீர்ச்சத்தின்மைக்கான சிகிச்சைகள் 316 விழுக்காடும் அதிகரித்துள்ளன.
இந்தக் கதிர்வெம்மையலையின் தாக்கத்தால் இதுவரை குறைந்தபட்சம் 1,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துல்லியமான புள்ளிவிவரங்கள் வருகிற வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனச் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் நெருக்கடியைச் சமாளிக்க, அரசாங்கம் Orsan எனப்படும் அவசரகாலத் திட்டத்தின் உச்சக்கட்ட நிலையான 3-ஆம் நிலையை (Niveau 3) நடைமுறைப்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளின் சுமை இன்னும் குறையாததால், இந்த அவசரநிலை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோகங்கள் ஒருபுறமிருக்க, இந்த வார இறுதியில் மீண்டும் ஒரு கதிர்வெம்மையலை தாக்கக்கூடும் என Météo-France வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை, மக்களையும் மருத்துவத்துறையையும் மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

