Paris பயணிகளுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்: இரண்டு வாரங்களுக்கு முடங்கப்போகும் தடம் 13 (Ligne 13)!
Paris நகரின் பரபரப்பான நிலக்கீழ் தொடருந்துப் போக்குவரத்தான தடம் 13-இன் (Ligne 13) Saint-Denis கிளை வழித்தடமும் ஓகஸ்டு மாதத் தொடக்கத்தில் தனக்கான நீண்ட விடுமுறையை எடுத்துக்கொள்ளவுள்ளது.
வருகிற ஜூலை 31 முதல் ஓகஸ்டு 17, 2026 வரை Saint-Denis-Université மற்றும் La Fourche தொடருந்து நிலையங்களுக்கு இடையிலான போக்குவரத்து இரு வழித்தட ங்களிலும் முற்றிலுமாக நிறுத்தப்படும் என RATP நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில் Paris நகர மையத்திற்குப் பயணிக்க விரும்புவோர், தடம் 14-ஐப் (Ligne 14) பயன்படுத்துவதே மிகச் சிறந்த மாற்று வழியாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் Saint-Lazare நிலையத்தை எளிதாகச் சென்றடைய முடியும்.
பயணிகளின் மேம்பட்ட வசதிக்காக MF19 எனப்படும் அதிநவீனப் புதிய தொடருந்துப் பெட்டிகளை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளனர். அதற்கேற்ப நிலக்கீழ் தொடருந்தின் உள்கட்டமைப்புகளைத் தரம் உயர்த்தும் மாபெரும் பணிகளுக்காகவே இந்தச் சேவை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த இரண்டு வாரங்கள் மட்டுமின்றி, கோடைக்காலம் முழுவதுமே வேறு சில தடங்கல்களையும் பயணிகள் சந்திக்க நேரிடும். ஓகஸ்டு 2, 16 மற்றும் 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் தடம் 13-இன் போக்குவரத்து நண்பகல் வரை முற்றிலுமாக முடங்கியிருக்கும்.
இந்த ஞாயிற்றுக்கிழமை காலை நேரச் சேவை நிறுத்தங்கள் இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
செப்டம்பர்: 13, 20, 27
ஒக்டோபர்: 11
நவம்பர்: 1, 15, 29
டிசம்பர்: 13
சிறப்புப் பேருந்து வசதி
பயணிகளின் நலன் கருதி, இந்த ஞாயிற்றுக்கிழமை முடக்கங்களின் போது Asnières Gennevilliers Les Courtilles மற்றும் Porte de Clichy நிலையங்களுக்கு இடையே சிறப்பு மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படும் என RATP நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

