யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

யாழில் அதிரடி: சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ்கிரீம் விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் அபராதம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், கடும் சுகாதார சீர்கேட்டுடன் வாகனத்தில் ஐஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருக்கு 06 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இந்தத் தண்டனையை 06 மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளதுடன், 23 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

 

சங்கானை, சுழிபுரம் மற்றும் அராலி ஆகிய பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்கள் மற்றும் நடமாடும் உணவு வாகனங்களில், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இதன் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல், அசுத்தமான சூழலில் இயங்கிய உணவகம், பாண் மற்றும் ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் கண்டறியப்பட்டன.

 

இதனையடுத்து, சட்டத்தை மீறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான முறையில் விற்பனையில் ஈடுபட்ட 10 பேருக்கு எதிராகப் பொது சுகாதார பரிசோதகர்களால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசித்துக் காட்டப்பட்ட போது, அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து, ஐஸ்கிரீம் விற்பனையாளருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை மற்றும் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், ஏனைய 09 பேரையும் கடுமையாக எச்சரித்த நீதிமன்றம், அவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாய் (மொத்தம் 9 இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Recommended For You

About the Author: admin