இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தனது மேற்கு வான்பரப்பை மூடியது ஈரான்!
இஸ்ரேல் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, மறு அறிவிப்பு வரும் வரை நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள தனது வான்பரப்பை (Espace aérien) முற்றிலுமாக மூடுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரானின் குடிமை விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான மதிப்பீடுகளுக்குப் பிறகு, நாட்டின் மேற்கு வான்பரப்பு மறு உத்தரவு வரும் வரை மூடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஈரானின் அதிகாரப்பூர்வச் செய்தி நிறுவனமான ‘இர்னா’ (Irna) வெளியிட்டுள்ளது.
மேலும், நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையங்களுக்குச் செல்வதைப் பொதுமக்கள் “முற்றிலுமாகத் தவிர்க்குமாறு” ஈரானிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் ஈரானின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது

