வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சின் அறிவித்தல்!
எதிர்வரும் பெரும்போகம் வரை நாட்டில் எவ்வகையிலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக, வாணிப மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டிக்காட்டுகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் சுமார் ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மெட்ரிக் தொன் சிவப்பு மற்றும் வெள்ளை அரிசி கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தேவையான அளவு மாற்று அரிசி இருப்புகளைப் பேண இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் மத்திய கிழக்குப் போர் காரணமாக நாட்டில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
போர் மோதல்கள் தொடர்ந்தாலும், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி நாட்டிற்கு சாதகத் தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் டொலரின் மதிப்பு உயர்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்குத் தற்போதைய அரசாங்கம் மேலும் இடமளிக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த பெரும்போகம் மற்றும் சிறு போகங்களுக்குத் தேவையான உரங்களை வழங்குவதற்குத் தலையீடு செய்ததைப் போல, அடுத்த பெரும்போகத்திற்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்வதற்கும் அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், உர மானியம் 30,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் கீரிச் சம்பா அரிசித் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த வருடத்தில் மாற்று அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்கான கொள்கை ரீதியான தீர்மானங்களை அரசாங்கம் எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

