நான் அரசியலில் இல்லை.! வந்தால் வென்றிருப்பேன்.. எனக்கும் விஜய்க்கும் 25 வருஷ இடைவெளி. போட்டி நல்லதல்ல. தவெகவினர் என்ன செஞ்சாலும் CM-க்கு தான் பாதிப்பு. நடிகர் ரஜினி அட்வைஸ்..!!
வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகச் சிறிய வயதில், இரு பெரும் திராவிடக் கட்சிகளை எதிர்த்துத் தனி ஆளாக நின்று வென்று காட்டியிருப்பது எனக்குப் பொறாமை அல்ல; ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையிலுள்ள தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், தேர்தல் முடிவுகளுக்குப் பின் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து மனம் திறந்து பேசினார்.
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது குறித்துப் பேசிய அவர், “தேர்தல் முடிவுகள் வந்ததும் நான் மு.க.ஸ்டாலினைச் சென்று பார்த்தேன். அது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. அவர் என்னுடைய 40 ஆண்டுகால நண்பர்.
எங்கள் நட்பும் கொள்கையும் அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், ஸ்டாலின் அவர்கள் கொளத்தூரில் தோற்றது எனக்குப் பெரும் சங்கடத்தைத் தந்தது. அதனால்தான் நண்பராக அவரைப் பார்த்தேன்.
அதற்காக, விஜய் முதல்வராகக் கூடாது என்பதற்காக நான் அவரைச் சந்தித்தேன் என்று கூறுவதெல்லாம் தரம் தாழ்ந்த விமர்சனம். அந்தளவுக்குத் தரம் கெட்ட நபர் ரஜினிகாந்த் அல்ல” என்றார்.
விமான நிலையத்தில் விஜய் குறித்த கேள்விக்குத் தான் பதிலளிக்காததைச் சுட்டிக்காட்டி எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “நான் அரசியலிலேயே இல்லை என விலகிவிட்டேன்.
அப்படி இருக்கும்போது எனக்கு ஏன் விஜய் மீது பொறாமை வரப்போகிறது? எனக்கும் விஜய்க்கும் ஒரு தலைமுறை இடைவெளி (கிட்டத்தட்ட 25 ஆண்டுகள்) உள்ளது.
விஜய் என்னுடன் போட்டியிட்டால் எனக்கும் நல்லதல்ல, அவருக்கும் நல்லதல்ல என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். அவர் தனி ஆளாக வென்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்கள் மத்தியில் அவர் மீதுள்ள எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்” என்றார். மேலும் தன் பாணியில், “கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காமல் இருப்பது கிடைக்காது” என்றும் குறிப்பிட்டார்.
விஜய்யைச் சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, சம்பிரதாயத்துக்காகச் சந்திப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறிய ரஜினி, “60 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து விஜய்யை முதல்வராக்கியுள்ளனர்.
மக்கள் அவரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு எந்தத் தொந்தரவும் செய்யாமல் விட்டுவிட வேண்டும்.
தவெக தொண்டர்கள் ஏதேனும் தவறுகள் செய்தால் அது நேரடியாக விஜய்யைத் தான் பாதிக்கும் என்பதால் தொண்டர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே தான் பதவி ஏற்பு விழாக்களுக்குச் சென்றதில்லை என்பதை நினைவுகூர்ந்த ரஜினி, ஆரோக்கியக் குறைபாடு காரணமாகவே தான் அரசியலுக்கு வரவில்லை என்று விளக்கமளித்தார்.
சினிமாவுக்காகத் தயாரிப்பாளர் பணம் போடுவதால் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் நடிக்க வேண்டியுள்ளது, ஆனால் அரசியல் அப்படியல்ல என்றார்.
இறுதியாக, “நான் ஒருவேளை அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருப்பேன், அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என்று அதிரடியாகக் கூறி விடைபெற்றார்.

