18 மணி நேர பயணத்தை கேன்சல் செய்த டிரம்ப்..
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது.
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர்.
ஈரானுடன் நேரடியாகப் பேச அமெரிக்கா தயாராக இருந்தபோதும், ஈரான் அதற்கு மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் மூலமாகவே செய்திகளைப் பரிமாற விரும்பியது. இதனால் ஈரானியக் குழுவினர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கு வரவிருந்த அமெரிக்கப் பிரதிநிதிகளும் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 18 மணி நேரம் பயணம் செய்து தேவையற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஈரான் பேச விரும்பினால் தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவிட வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தைத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.
அமைதிக்கான ஒரு வரைவுத் திட்டத்தை ஈரான் வழங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமெரிக்கா இதில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பது குறித்து தங்களுக்குத் தெளிவில்லை என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

