பிரான்சில் மீண்டும் ஒரு தரவுத் திருட்டு: அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிம ஆணையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது!
(பாரிஸ் 20/04/2026)
பிரான்ஸ் குடிமக்களின் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் (Passports) மற்றும் ஓட்டுநர் உரிமங்களை நிர்வகிக்கும் ‘தேசிய பாதுகாப்பான அடையாள ஆவணங்கள் முகமை’ (ANTS) மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் மூலம் பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறைத் தரவுகள் திருடப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி இந்த பாதுகாப்பு அத்துமீறல் கண்டறியப்பட்டது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது:
அடையாளத் தரவுகள்: பயனரின் முழுப் பெயர், பாலினம் மற்றும் பிறந்த திகதி.
தொடர்புத் தகவல்கள்: மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி.
கணக்கு விபரங்கள்: இணையதள நுழைவு அடையாள எண் (Login ID) மற்றும் பிறந்த இடம்.
இந்தத் தாக்குதலில் பயனர்கள் விண்ணப்பங்களுடன் இணைத்த ஆவணங்கள் (சான்றிதழ் நகல்கள் போன்றவை) திருடப்படவில்லை என அமைச்சகம் உறுதியளித்துள்ளது. மேலும், இந்தத் தரவுகளைக் கொண்டு பயனர்களின் கணக்குகளுக்குள் ஊடுருவ முடியாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பரிஸ் நகர அரசு வழக்கறிஞரிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இந்தத் தரவுத் திருட்டினால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்குத் தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சேவைகள் தடையின்றித் தொடரவும் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கடந்த சில வாரங்களாகவே சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான் சுகாதாரத் துறையைச் சேர்ந்த சுமார் 15 மில்லியன் பிரெஞ்சு மக்களின் தரவுகள் திருடப்பட்ட செய்தி வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது அடையாள ஆவணங்களை நிர்வகிக்கும் ஆணையமும் (ANTS) இலக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் தகவல்கள் திருடப்படுவதால், எதிர்காலத்தில் மோசடி நபர்கள் இந்தத் தகவல்களைப் பயன்படுத்திப் போலி மின்னஞ்சல்கள் மூலமாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ மக்களை ஏமாற்ற முயலலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

