தெற்கு லெபனானில் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: நபதியே நகரில் குண்டுவெடிப்புகளால் பதற்றம்
பெய்ரூட்:
தெற்கு லெபனானின் முக்கிய நகரங்களில் ஒன்றான நபதியே (Nabatieh) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று இஸ்ரேலியப் படைகள் உக்கிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
லெபனானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான NNA மற்றும் சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸ் (Reuters) இதனை உறுதிப்படுத்தியுள்ளன.
நபதியே நகரின் குடியிருப்புப் பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் பெரும் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இன்று அதிகாலை நபதியேவின் ‘சலாம்’ குடியிருப்புப் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெற்கு லெபனானை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் லிதானி ஆற்றின் குறுக்கே உள்ள கடைசிப் பாலத்தையும் (Qasmiyeh Bridge) இஸ்ரேலியப் படைகள் தகர்த்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான இந்தத் தாக்குதல்களால் இதுவரை 11 பேர் உயிரிழந்து உள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ள பொதுமக்களை வடக்கு நோக்கி இடம்பெயருமாறு இஸ்ரேலிய இராணுவம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் நிலப்பரப்பில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.

