குடியுரிமை பெற ‘குடிமக்கள் கலாச்சார’ தேர்வு: குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கும் பின்லாந்து!
ஐரோப்பிய நாடான பின்லாந்து, தனது குடியேற்றக் கொள்கைகளை மேலும் கடுமையாக்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை இன்று (ஏப்ரல் 16) அறிவித்துள்ளது. அதன்படி, இனி பின்லாந்து குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள், அந்நாட்டின் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
பின்லாந்தின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தேர்வானது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளான ‘பின்னிஷ்’ (Finnish) அல்லது ‘ஸ்வீடிஷ்’ (Swedish) ஆகிய இரண்டில் ஏதேனும் ஒரு மொழியில் நடத்தப்படும்.
பின்லாந்து சமூகத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் அடிப்படை நெறிமுறைகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்பதை மதிப்பிடுவதே இத்தேர்வின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மொழிகளில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அல்லது பல்கலைக்கழகப் பட்டம் பெறுவதும் ‘குடிமக்கள் அறிவை’ நிரூபிப்பதற்கான மாற்று வழிகளாக ஏற்றுக்கொள்ளப்படும்.
பின்லாந்தின் முக்கிய சட்டங்கள், அடிப்படை மற்றும் மனித உரிமைகள், பாலின சமத்துவம், வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான கேள்விகள் இந்தத் தேர்வில் இடம்பெறும்.
நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் கிடைத்தவுடன், அடுத்த ஆண்டு முதல் இந்தத் தேர்வு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியேற்றங்களை விமர்சிக்கும் கட்சியான ‘தி ஃபின்ஸ்’ (The Finns) கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் மாரி ரண்டனென் (Mari Rantanen) இதுகுறித்துக் கூறுகையில், “யாருக்கும் குடியுரிமை என்பது தானாகவே கிடைத்துவிடாது. இந்தச் சீர்திருத்தங்கள் சமூக ஒருங்கிணைப்பையும், வேலைவாய்ப்பையும் பெருக்குவதோடு, பின்லாந்து சமூகத்தின் விதிகளை மதித்து நடப்பதையும் ஊக்குவிக்கும். இவை மிகவும் அவசியமானவை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தற்போதைய அரசு பதவியேற்றதில் இருந்து, குடியேற்ற விதிகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ஒரு நபர் நாட்டில் தங்கியிருக்க வேண்டிய குறைந்தபட்சக் காலம், குற்றப் பின்னணி இல்லாத நன்னடத்தை மற்றும் போதிய நிதி ஆதாரம் போன்ற விதிமுறைகள் ஏற்கனவே கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையே இந்த புதிய ‘குடிமக்கள் கலாச்சார’ தேர்வாகும்.
இதுமட்டுமின்றி, பொது அமைதிக்கோ அல்லது தேசியப் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலாகக் கருதப்படும் நபர்களை மிக விரைவாக நாடு கடத்தவும், அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் நுழைவதை முன்கூட்டியே தடை செய்யவும் பின்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் தனது குடியேற்றச் சட்டத்தைக் கடுமையாக்கியதைப் போல, தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் தங்களின் குடியேற்றக் கொள்கைகளை மாற்றிமைத்து வருகின்றன. குறிப்பாக, பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனும் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோன்றதொரு தேர்வு முறையைக் கொண்டுவர முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

