மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!

மலையக மக்களுக்கு காணி உரிமை தனி வீடு கோரி பதுளையில் ஆர்ப்பாட்டம்.!!

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வசிக்கும் தோட்ட மக்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இணைந்து காணி உரிமை உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இன்று (02) பதுளை நகரில் பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊவா மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மலையக மக்களுக்கு நீண்ட காலமாக நிலவி வரும் காணி உரிமை பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக பல தலைமுறைகளாக தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களுக்கென தனி காணி உரிமை இன்றி வாழ்ந்து வருவதாகவும், இதனால் சமூக, பொருளாதார முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகின்றன என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர், “மலையக மக்களுக்கு காணி உரிமை வேண்டும்”, “தற்காலிக திட்டங்கள் வேண்டாம்”, “தனி வீட்டு திட்டம் வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கையுடன், கோஷங்களை எழுப்பியதுடன்,தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

மக்கள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில், நீடித்த மற்றும் நிலையான வீட்டு திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதும், அடிப்படை வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும், இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தால் காணி, வீடு மற்றும் சொத்துகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் விரைவாக நிரந்தர வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

டித்வா பாதிப்பால் இன்னும் பல குடும்பங்கள் தற்காலிக வசிப்பிடங்களில் தங்கியிருந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு நிலையான தீர்வு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான தோட்ட தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பல சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமூக நீதி மற்றும் சம உரிமை கிடைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், மக்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்று ஊவா மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

அந்த கடிதத்தின் மூலம் காணி உரிமை வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தவும், மலையக மக்களின் நீண்டகால வீட்டு பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக காணி உரிமை வழங்கப்படுவது மிக அவசியமானதாகும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin