ஈரான் தாக்குதல்: அமீரகம் மற்றும் பஹ்ரைன் அலுமினிய ஆலைகள் பாதிப்பு!
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அலுமினிய உற்பத்தி ஆலைகள் மீது ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. பெப்ரவரி 2026 இறுதியில் தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
பஹ்ரைனில் உள்ள ‘அலுமினியம் பஹ்ரைன்’ (Alba) நிறுவனத்தின் முக்கிய ஆலை இலக்கு வைக்கப்பட்டது. இச்சம்பவத்தில் இரண்டு ஊழியர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாக அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேவேளை, அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ‘எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம்’ (EGA) நிறுவனத்தின் அல்-தவீலா (Al-Taweelah) ஆலை கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அங்கு ஆறு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானிய அரசாங்க ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆலைகள் அமெரிக்க இராணுவத்துடன் தொடர்புடையவை என்றும், ஈரானின் உருக்கு ஆலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் IRGC தெரிவித்துள்ளது.
உலகளாவிய அலுமினிய விநியோகத்தில் 9% பங்களிப்பை வழங்கும் இந்த வளைகுடா ஆலைகள் மீதான தாக்குதல், சர்வதேச சந்தையில் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பஹ்ரைன் மற்றும் அமீரகத்தின் காவற்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினர் நிலைமையைக் கண்காணித்து வருவதுடன், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

