நாவற்குழியில் சிறுமியைத் துஸ்பிரயோகம் செய்த இளநிலை பிக்கு கைது: ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு ஒருவர், சிறுமி ஒருவரைத் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி ஒருவர், நேற்று சனிக்கிழமை விகாரை வளாகத்திற்குத் குடிநீர் பெறுவதற்காகச் சென்ற வேளை, அங்கு புதிதாக வந்திருந்த இளநிலை பிக்கு அச்சிறுமியைத் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், குறித்த இளநிலை பிக்குவைக் கைது செய்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவானின் இல்லத்தில் அவர் முற்படுத்தப்பட்ட போது, பிக்குவை எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புனிதமான விகாரை வளாகத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

