இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: இரசாயன ஆலையில் தீப்பரவல்!
இஸ்ரேலின் தெற்குப் பகுதியை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், பீர்ஷேபா (Beersheba) அருகே உள்ள தொழில்பேட்டை மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நியோட் ஹோவாவ் (Neot Hovav) பகுதியில் அமைந்துள்ள ‘அடாமா’ (ADAMA) எனப்படும் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் இரசாயன ஆலையின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் அப்பகுதி எங்கும் பரவின.
எனினும், இஸ்ரேலிய அவசரகாலப் பிரிவினர் உடனடியாகச் செயற்பட்டு அருகில் இருந்தவர்களை அப்புறப்படுத்தியதால், உயிர்ச் சேதங்களோ அல்லது பொதுமக்களுக்குப் பாதிப்போ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக ஏவுகணை அபாயச் சங்குகள் முழங்கிக் கொண்டிருந்த நிலையிலும், தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நச்சுப் பொருட்கள் கசிவு குறித்த அச்சம் ஆரம்பத்தில் நிலவிய போதிலும், தற்போது அத்தகைய ஆபத்து எதுவுமில்லை எனச் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலானது, ஈரானின் நட்டான்ஸ் (Natanz) மற்றும் டிமோனா (Dimona) போன்ற அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகக் கருதப்படுகிறது.
மேலும், ஈரானின் எஃகு ஆலைகள் மற்றும் எரிவாயு வயல்கள் போன்ற தொழில்சார் உட்கட்டமைப்புகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இதற்குப் பதிலடியாக, ஈரான் வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய சொத்துக்களை இலக்கு வைத்து வருவதுடன், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள எரிசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் நிபந்தனையற்ற சரணடைவை (Unconditional Surrender) அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளமை பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

