தங்கம் வாங்க ஆளே இல்லை? போர் சூழலிலும் ரேட் உயராமல் இருப்பது ஏன்!
ஆனந்த் சீனிவாசன்
பொதுவாகவே இதுபோன்ற போர்க் காலங்களில் தங்கம் விலை எக்குத்தப்பாக உயர்ந்துவிடும். ஆனால், இந்த முறைப் போர் 2வது வாரமாகத் தொடரும் போதிலும் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை.
சொல்லப்போனால் கடந்த வாரம் முழுக்க தங்கம் விலை குறைந்திருந்தது. இதற்கிடையே ஏன் இதுபோல நடக்கிறது என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
எப்போதுமே போர் உட்பட எந்தவொரு இக்கட்டான சூழல் உருவாகும்போதும் தங்கம் விலை உயர ஆரம்பித்துவிடும். கடந்த காலங்களில் உக்ரைன் மோதல் சமயத்தில் கூட இதேதான் நடந்தது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக மோதல் ஆரம்பித்தது முதலே தங்கம் விலை உயரவில்லை. கடந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வந்தது.
ஆனந்த் சீனிவாசன்
இதனால் இணையத்தில் பலவித தகவல்கள் உலா வர ஆரம்பித்து. அதாவது டிமாண்ட் போய்விட்டது. தங்கத்தை வாங்க ஆள் இல்லை. இதன் காரணமாகவே தங்கம் விலை போர் சமயத்திலும் உயரவில்லை எனப் பலரும் பல கருத்துகளைச் சொன்னார்கள். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வரி எனச் சொல்லி உலக நாடுகளிடம் வசூலித்த தொகையை அமெரிக்கா திரும்பக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதையும் எப்படியும் கடன் வாங்கியே அமெரிக்கா கொடுக்கும். சங்கராச்சாரியார் ஒரு விஷயம் சொல்வார். அதாவது குரங்கிற்குக் கல் கொடுத்து, அதைத் தேளை வைத்துக் கடிக்க வைத்தால் எப்படி ஆடுமோ அதுபோல தான் சில மனிதர்கள் என்று. டிரம்ப் இப்போது அப்படி தான் ஆடிக் கொண்டு இருக்கிறார்.
உலகெங்கும் பாதிப்பு
போரை ஆரம்பித்துவிட்டு, அதில் வெல்லப் பாதிரியார்களைக் கூப்பிட்டு ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு இருக்கிறார். இங்கு டிரம்பிற்கு ஒரு கடவுள், ஈரானுக்கு ஒரு கடவுள் என இல்லை.. அனைவருக்கும் ஒரே கடவுள் தான். எதிர் சிந்தனையில் இருக்கிறார் என்பதற்காகவே ஒருவரை சாகடிப்பது எந்த விதத்தில் நியாயம். அதாவது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றால் பேசி தான் தீர்க்க வேண்டும். இன்னொரு நாட்டில் இறங்கி அடிப்பது என்பது அநாகரிகம்.
மத்திய கிழக்கு மோதல் பாதிப்பு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. அதேபோல வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துவிட்டது. இதனால் சிறு சிறு கடை வைத்திருப்போருக்குத் தான் பாதிப்பு. அவர்கள் தங்கள் உணவுகளின் விலையை ஏற்ற வேண்டி இருக்கிறது..
தங்கம் உயராதது ஏன்
தங்கம் விலை இதுபோன்ற சூழல்களில் ஏற வேண்டும். ஆனால், அது ஏறவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. அமெரிக்காவில் 3 விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பின்மை, வசூலித்த வரியைத் திரும்பத் தர வேண்டும்.. இந்த போரில் செலவிட்டதும் கடன் வாங்கியே செய்துள்ளார். அதையும் திரும்பக் கணக்குக் காட்ட வேண்டும். இதெல்லாம் சேர்த்தால் பட்ஜெட்டை தாண்டியே கூடுதலாக 300 முதல் 350 பில்லியன் டாலர் அமெரிக்காவுக்குத் தேவைப்படும்.
இந்த தொகை எல்லாம் பணவீக்கமாகவே மாறும். தங்கம் விலை இப்போதும் உயரவே செய்யும். எப்போது ஏற ஆரம்பிக்கும் என்பது மட்டுமே கேள்வி. இந்த முறை எதிர்பார்த்தபடியே பங்குச்சந்தை சரிந்துள்ளது. ஆனால், சற்று வித்தியாசமாகத் தங்கம் விலை உயராமல் டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏனென்றால் எல்லாரும் போய் டாலரை வாங்கியுள்ளனர். டாலர் மதிப்பு அதிகரித்தாலேயே தங்கம் விலை குறைந்து இருக்கிறது. அதுவும் பெரியளவில் எல்லாம் குறையவில்லை.. நிலையாகவே இருக்கிறது.
தங்கத்தை வாங்க ஆள் இல்லை?
டாலர் மதிப்பு உயர்வதே தங்கம் விலை சரியக் காரணம். தங்கத்தை வாங்க ஆள் இல்லை என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். அதில் எல்லாம் உண்மை இல்லை. தங்கத்தை வாங்க ஆட்கள் ரெடியாக இருக்கிறார்கள். டாலர் மதிப்பு உயர்வது மட்டுமே காரணம். அதுவும் சில நாட்கள் மட்டுமே இப்படி இருக்கும். சீக்கிரமே எல்லாம் மாறும்” என்றார்.

