ஈரான் கடற்படையை மொத்தமாக காலி செய்த அமெரிக்கா!

சம்பவம்.. ஈரானால் இனி எழுந்திருக்கவே முடியாது.. கடற்படையையே மொத்தமாக காலி செய்த அமெரிக்கா!

 

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையேயான ராணுவ மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

 

எபிக் ஃபியூரி’ (Epic Fury) என்ற பெயரில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ ஆபரேஷனில், ஈரானின் கடற்படைக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஒரு நீர்மூழ்கிக் கப்பல் உட்பட மொத்தம் 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடங்கின. இதற்கு பதிலடி கொடுக்க ஈரானும் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

குறிப்பாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவாகி, பல நாடுகள் அதனை கவனித்து வருகின்றன.

 

எபிக் ஃபியூரி ஆபரேஷன்

 

இந்நிலையில் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனை வழிநடத்தி வரும் அமெரிக்க ராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று அளித்த பேட்டியில் முக்கிய தகவல்களை வெளியிட்டார். அந்த ஆபரேஷன் தொடங்கிய முதல் 100 மணி நேரத்திலேயே இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அவர் கூறினார். 24 மணி நேரமும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 2,000க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அமெரிக்கா

 

இந்த தாக்குதல்களில் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. மேலும், ஈரானின் நூற்றுக்கணக்கான நீண்டதூர ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுதளங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன், ஈரான் கடற்படையும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் தகவலின்படி, ஈரான் கடற்படையில் இருந்த முக்கிய போர்க் கப்பல்களில் ஒன்றான ‘ஐஆர்ஐஎஸ் மக்ரான்’ தாக்குதலில் செயலிழந்தது.

 

போர்க் கப்பல்

 

இது முன்பு எண்ணெய் டேங்கர் கப்பலாக இருந்தது. பின்னர் அதை போர்க் கப்பலாக மாற்றி ஈரான் பயன்படுத்தி வந்தது. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த இந்த கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதேபோல், கடந்த ஆண்டு ஈரான் கடற்படையில் சேர்க்கப்பட்ட ‘பகேரி’ என்ற போர்க் கப்பலும் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் இயக்கும் வசதி இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ‘ஜமரான்’, ‘சாஹந்த்’, ‘சபாலன்’, ‘பேயந்தர்’, ‘நக்தே’ உள்ளிட்ட பல போர்க் கப்பல்களும் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

ஈரான் கடற்படை

 

இதனுடன், ஈரான் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்த ஒரு நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘தரேக்’ உள்ளிட்ட சிறிய நீர்மூழ்கிப் படகுகளும் தாக்குதலில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவுடன் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன் 2026’ கடற்படை கூட்டுப் பயிற்சியில் பங்கேற்று திரும்பிய ஈரானின் ‘தேனா’ என்ற போர்க் கப்பல் இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல் பகுதியில் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஈரான் அமெரிக்கா போர்

 

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ குண்டுகளை ஏவி அந்த கப்பலை மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 80 கடற்படை வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ஈரான் கடற்படையில் இருந்த 17 போர்க் கப்பல்களும் அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளதால் அந்த நாட்டிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், ஈரானும் தனது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தொடர்ந்து பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழல் தொடர்கிறது.

Recommended For You

About the Author: admin