சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் பயணம்: சாதனை படைத்த மக்கின் முகமது அலி!

சக்கர நாற்காலியில் இலங்கை முழுவதும் பயணம்: சாதனை படைத்த மக்கின் முகமது அலி!

வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மக்கின் முகமது அலி, சக்கர நாற்காலியில் 1500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடந்து மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இன்று மன்னாரில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

வடமாகாண சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி, நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொண்ட இந்த சவாலான பயணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த ஜனவரி 20-ஆம் திகதி மன்னார் தந்தை செல்வா சிலையடியில் இருந்து ஆரம்பமான இந்தப் பயணம்

இன்று வெள்ளிக்கிழமை (06) காலை 10 மணி அளவில் மீண்டும் மன்னார் பஜார் பகுதியை வந்தடைந்த நிலையில் நிறைவடைந்தது.

கடற்கரையோரமாக சுமார் 1500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை தனது சக்கர நாற்காலி மூலமே கடந்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் அனர்த்தங்களின் போது உதவிய புலம்பெயர் உறவுகளுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல், மற்றும் இலங்கை மக்களிடையே காணப்படும் இன, மத வேறுபாடற்ற சமூக நல்லெண்ணத்தை வெளிப்படுத்துதல், கல்வி கற்ற மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பின்றி முடங்கிக் கிடப்பதைக் சுட்டிக்காட்டி, அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே இந்தப் பயணம் ஆரம்பிக்கப்பட்டது

மன்னார் பஜார் பகுதியை வந்தடைந்த அவருக்கு மன்னார் மக்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒரு தனிமனிதனாக சக்கர நாற்காலியில் முழு இலங்கையையும் சுற்றி வந்த அவரது மன உறுதி பலருக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin