அமரனானார், ’அடங்கா அதிகார விரும்பி அஜித்பவார்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

அமரனானார், ’அடங்கா அதிகார விரும்பி அஜித்பவார்’ என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

விமான விபத்தில் அஜித்பவார் உள்ளிட்ட ஆறுபேர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் தொடங்கி அனைத்து பிரபலங்களும் ’ஆகா, ஒகோ..’ என்று அஜித்பவாரை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.. என்றால், இது தான் இன்றைய சூதுவாது நிறைந்த பவர் பாலிடிக்ஸின் நிதர்சனம்!

தற்போது பாஜகவின் தேவேந்திர பட்னாவிசின் அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்த இவர் மீது அதி பயங்கர ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாஜக கூட்டணிக்கே ஈதை எப்படி சமாளிப்பது ? என இது பெரும் தர்ம சங்கடத்தை தந்தது! பாஜக கூட்டணியில் தனக்கு ’பாதுகாப்பற்ற நிலை’ என்றதும், மீண்டும் சரத்பவாரிடம் சரணடைந்தார் அஜித்பவார்!

அவரது இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன….

என்னைப் பொறுத்த வரை இந்தியாவின் ஆகப் பெரிய அசிங்கம் ஒன்று அஸ்தமித்தது!

உண்மையில் இவரை ‘POWER’ ரை இடைவிடாது பற்றிக் கொண்டிருந்த பவார் எனலாம்!

மாறி மாறி, கூட்டணி தாவும் சந்தர்ப்பவாதி,
கூச்ச நாச்சமற்ற ஊழல்வாதி ,
மானரோஷமற்ற அதிகார விரும்பி..,
துரோகத்தின் தலைமகன்,
கொள்கை கோட்பாடில்லாத அரசியலின் இலக்கணம்

என அஜித்பவாரைச் சொல்லலாம்.

நான்கு முறை மகாராஷ்டிராவின் துணை முதல்வாரான போதும், கடைசி வரை முதல்வராக முடியவில்லை.

அரசியலில் அடி எடுத்து வைத்தது தொடங்கி எப்போதும் அதிகார பதவிக்கென்றே ஆலாய் பறந்தார்.

முதன்முதலில் புனே கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போதே ‘கோல்மால்களின் தலைவர்’ என்று பெயரெடுத்தவர்!

இவர் வேளாண் துறை அமைச்சராக இருந்த காலம் தொடங்கி தான் மகார்ச்ஷ்டிராவின் ‘விதர்பா’வில் விவசாயிகளின் தற்கொலை ஆரம்பித்தது!

மின்துறை அமைச்சராகி மக்களுக்கெல்லாம் மின் கட்டண உயர்வவெனும் ‘ஷாக் டிரிட்மெண்ட்’ தந்தார்.

மண்வளப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது மண் வளத்தை சூறையாடினார்.

சொந்த சித்தப்பாவையே, ”நீ செத்தப்பா” என்று இவர் வச்சு செய்த துரோகச் சம்பவங்கள் ஏராளம்.

2019-ல் காங்கிரஸ், என்.சி.பி, சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடப்படுகிறது. அந்தச் சூழலில் இரவோடு இரவாக கட்சி தாவி, அதிகாலை பாஜக அமைச்சரவையில் துணை முதல்வரானதோடு, என்.சி.பியின் எம்.எல்.ஏக்கள் தன்னையே ஆதரிப்பதாக சொல்லி சர்த்பவாரின் முதுகில் குத்தியவர் தான் அஜித்பவார்.

அப்போது உச்ச நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என கட்டளையிட்டது. போதுமான எம்.எல்.ஏக்களை உஷார்படுத்த முடியாததால், அஜித்பவார் மீண்டும் சரத்பவாரிடம் சரண் அடைந்தார்! உடனே, மகனை கட்டித் தழுவி அரவணைத்து, சிவசேனா அமைச்சரவையில் துணை முதல்வராக்கி அழகு பார்த்தது, சரத்பவாரின் குடும்ப அரசியல்!

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை நோக்கிய ஓடும் என்பது போல மீண்டும் சித்தப்பாவிற்கு துரோகம் இழைத்து 29 எம்.எல்.ஏக்களை தூக்கிக் கொண்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆட்சியில் துணை முதல்வரானார்.

ராமதாஸ் அன்புமணியிடம் கட்சியையும், சின்னத்தையும் பறிகொடுத்தது போல சர்த்பவாரும் தான் உருவாக்கிய தேசியவாத காங்கிரஸ் பெயரையும், கட்சி சின்னத்தையும் அஜித்பவாரிடம் இழந்தார்.

இப்படி தன் நலம் சார்ந்து ஓயாத அதிகார ஆட்டம் ஆடிய அஜித்பவாரை காலம் கபளிகரம் செய்து விட்டது..என்பதா? அல்லது வினைப் பயனால் வந்த விதி என்பதா?

கூடா இடத்தில் சேர்ந்து கேடாக பல காரியங்களை நிகழ்த்திய இவர் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற பேச்சு பலமாக எழுந்துள்ளது. ராஜ பரிபாலன அதிகார யுத்தத்தில் கொலை என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றே என்கிறது, சனாதனிகளின் மனு தர்மம். மக்கள் ஜனநாயக யுகத்திலும் மனுதர்மம் கோலோச்சவே செய்கிறதோ..?

யார் கண்டது..? மேலுலகத்தில் ஒரு அதிகார யுத்தம் வருமென்றால், அந்த ஆண்டவனையே கவிழ்த்துவிட்டு, அவன் ஆசனத்தை அபகரிக்கத் தயங்காதவர் தான் அஜித்பவார்!

Recommended For You

About the Author: admin