பெண்களுக்கெதிரான சமூக ஊடகத் தாக்குதல்: மன்னாரில் வெடித்தது கண்டனம்!
மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு எதிராக, சமூக ஊடகங்கள் வழியாக முன்னெடுக்கப்படும் அவதூறுப் பரப்புரைகளைக் கண்டித்து இன்று (ஜனவரி 29, 2026) ஒரு முக்கிய ஊடக சந்திப்பு நடைபெற்றது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குரு சாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பெண் அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
பெண்களை மௌனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குணாதிசயங்களை இலக்கு வைத்து போலி முகநூல் கணக்குகள் மூலம் பரப்பப்படும் செய்திகள் ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தல் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
அவதூறு பரப்பும் போலி முகநூல் பக்கங்களைக் கண்டறிந்து, அவற்றுக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு எதிராகப் பொறுப்புள்ள அதிகாரிகள் உடனடியாகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் .
இத்தகைய தாக்குதல்கள் பெண்களின் தலைமைத்துவத் துணிச்சலைத் தளர்த்துவதுடன், அவர்களுக்குப் பாரிய உளவியல் அழுத்தங்களையும் ஏற்படுத்துகின்றன.
பெண்கள் அச்சமின்றித் தமது கருத்துகளைத் தெரிவிக்கவும், அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடவும் ஏற்ற பாதுகாப்பான மற்றும் மரியாதையான இணையச் சூழலை அரசு உருவாக்க வேண்டும்.
பெண்களின் அரசியல் பங்கேற்பைத் தடுக்கும் எந்தவொரு செயலையும் சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனவும், இதற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

