மன்னாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதி திறப்பு: 40 ஆண்டுகால முடக்கம் முடிவுக்கு வருகிறது!
மன்னார் நகரின் மையப்பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த ஒரு முக்கிய வீதி, தற்போது மன்னார் நகர சபையினால் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த வீதி, மன்னார் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய இணைப்பாகக் கருதப்படுகிறது.
1983-1984 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இந்த வீதி பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது. இன மோதல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இது மூடப்பட்டது.
வீதி மூடப்பட்டிருந்த நீண்ட காலப்பகுதியில், அங்கு இராணுவச் சோதனைச் சாவடிகள் மற்றும் பாஸ் (Pass) வழங்கும் அலுவலகங்கள் இயங்கி வந்தன.
யுத்தம் முடிவடைந்த பின்னரும், நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பிற்குரிய பொருட்கள் (கட்டுக்காவல் பொருட்கள்) சேமித்து வைக்கப்படும் இடமாக இந்த வீதி பயன்படுத்தப்பட்டு வந்தது.
மன்னார் நகர சபையினரால் குறித்த வீதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் முழுமையாகச் சுத்தம் செய்யப்பட்டு, செப்பனிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
விரைவில் இந்த வீதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளமை, அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


