அஜித்பவார் மரணத்தில் சதி? – உச்சநீதிமன்ற விசாரணை கோருகிறார் மம்தா பானர்ஜி!
மகாராஷ்டிர அரசியலின் முக்கிய தூணாக விளங்கிய துணை முதல்வர் அஜித்பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்து குறித்து அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
🔍 அஜித்பவார் அண்மைக்காலமாக ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தனது மாமா சரத்பவாரின் அணியில் இணைய வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. “அவர் பா.ஜ.க-வை விட்டு வெளியேறத் தயாராகி வந்த நிலையில், இந்த விபத்து நடந்திருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநிலத்தின் துணை முதல்வருக்கே இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விபத்து குறித்து மத்திய அரசின் கீழ் உள்ள புலனாய்வு அமைப்புகள் விசாரித்தால் உண்மை வெளிவராது என்றும், உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் (Supreme Court-monitored probe) முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
🛩 இன்று காலை மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற தனியார் சிறிய ரக விமானம் (Learjet 45), தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அஜித்பவார் உட்பட விமானத்தில் இருந்த 5 பேரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
“மத்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. எனக்கு அவற்றின் மீது நம்பிக்கை இல்லை. உச்சநீதிமன்றம் மட்டுமே இந்த மரணத்தின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்..
அஜித்பவாரின் இந்த திடீர் மறைவு மகாராஷ்டிர அரசியலில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


