28 ஆண்டுகளுக்குப் பின் சொந்த இடத்தில் காங்கேசன்துறை பொது சந்தை!
சுமார் 28 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த காங்கேசன்துறை பொது சந்தை, இன்று முதல் (ஜனவரி 28, 2026) மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளது.
வலி. வடக்கு பிரதேச சபையின் தீவிர முயற்சியால், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சந்தை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
1990-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் காரணமாக மக்கள் வெளியேறியதை அடுத்து, இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டது.
மக்கள் மீள்குடியேறிய பிறகு சந்தை கட்டடங்கள் கட்டப்பட்டாலும், போதிய வாடிக்கையாளர்கள் வராததால் வியாபாரிகள் விற்பனையைக் கைவிட்டனர். இதனால் சந்தை கட்டடம் மூடப்பட்டுக் கிடந்தது.
இந்தநிலையில் வலி. வடக்கு பிரதேச சபை மீண்டும் அமைக்கப்பட்ட பிறகு, ஜனவரி 2026 முதல் சந்தையை மீண்டும் இயக்கத் தீர்மானிக்கப்பட்டது.
சந்தையைச் சுற்றியுள்ள வீதியோர வியாபாரங்கள் மற்றும் கடைகளில் மரக்கறி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டு, அனைத்து வியாபாரிகளும் சந்தை கட்டடத்திற்குள் ஒன்றிணைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உத்தியோகபூர்வ திறப்பு விழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய தினமே ஆர்வமுள்ள வியாபாரிகள் சிலர் தமது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
காங்கேசன்துறை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அப்பகுதியின் பழைய செழிப்பை மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


