திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான 10 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஜனவரி 28-ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் பாதுகாப்பு திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
கடந்த 14-ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகத் தவறிய சுதிப்ப லியனகே இன்று சமூகமளித்த நிலையில், அவரும் எதிர்வரும் 28-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர்களுடன் பலாங்கொடை வனவாசி காசியப்ப தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்கள் மற்றும் ஐந்து பொதுமக்கள் என மொத்தம் 10 பேர் இந்த வழக்கில் விளக்கமறியலில் உள்ளனர்.
இன்று (ஜனவரி 19) திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுடீன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே, விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டார்.
சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பான இந்த வழக்கு திருகோணமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

