பொரளையில் பரபரப்பு: பெண்ணின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய தொழிலதிபர் கைது!
பொரளையில் பெண் ஒருவரை நிர்வாணப்படுத்தி, அதனை காணொளியாக சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில் முக்கிய சந்தேக நபரான பிரபல தொழிலதிபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருக்கும் காணொளி ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து குழந்தைகள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பணியகம் தீவிர விசாரணையை முன்னெடுத்தது.
பொரள்ளை, ஃபேர்ஃபீல்ட் கார்டன்ஸைச் சேர்ந்த 43 வயதுடைய முக்கிய சந்தேக நபர் (தொழிலதிபர்), ஹிக்கடுவவில் உள்ள ஒரு விடுதியில் மறைந்திருந்தபோது ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) கைது செய்யப்பட்டார்.
ஆதாரங்களை மறைக்க உதவியதாக எஹெலியகொட பகுதியைச் சேர்ந்த 44 மற்றும் 55 வயதுடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த பெண்ணை, ஒரு குழுவினர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, அதனை ‘வட்ஸ்அப்’ குழுக்களில் பரப்பியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அளுத்கம நீதவான் நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முக்கிய சந்தேக நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுவதைத் தவிர்க்க, குறித்த தொழிலதிபர் பல்வேறு சொகுசு ஹோட்டல்களில் மாறி மாறி தங்கி வந்த நிலையில், காவற்துறையினரின் சாதுரியமான நடவடிக்கையினால் சிக்கியுள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒருவரின் தனிப்பட்ட கௌரவத்தைச் சிதைக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

