சிரியாவில் போர்நிறுத்தம் – 14 அம்ச ஒப்பந்தம் கையெழுத்தானது
சிரிய அரசாங்கம் மற்றும் குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளுக்கும் (SDF) இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18, 2026) சிரிய அதிபர் அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) மற்றும் SDF தளபதி மஸ்லூம் அப்டி (Mazloum Abdi) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் வடகிழக்கு சிரியாவில் பல ஆண்டுகளாக நீடித்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த ஒப்பந்தப்படி அனைத்து முனைகளிலும் சிரிய இராணுவத்திற்கும் SDF படைகளுக்கும் இடையிலான சண்டைகள் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
மேலும் ரக்கா (Raqqa) மற்றும் டீர் எஸ்-சோர் (Deir ez-Zor) ஆகிய மாகாணங்கள் முழுமையாக சிரிய அரசாங்கத்தின் நிர்வாக மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும்.
இப்பகுதியில் உள்ள அனைத்து எண்ணெய் கிணறுகள், எரிவாயு வயல்கள் மற்றும் எல்லைக் கடக்கும் இடங்கள் அரசாங்கத்தின் வசம் ஒப்படைக்கப்படும்.
இதேவேளை SDF அமைப்பில் உள்ள வீரர்கள் சிரியாவின் பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களின் கீழ் தனித்தனியாக இணைக்கப்படுவார்கள்.
இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளதுடன், இது ஒரு “ஒருங்கிணைந்த சிரியாவுக்கான தொடக்கம்” எனத் தெரிவித்துள்ளது. துருக்கியும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

