மன்னார் வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் ஆரம்பம்..!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட கிளினிக் (Neuro Surgery Clinic) நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் நரம்பியல் சத்திரசிகிச்சை மற்றும் அது சார்ந்த நீண்டகால நோய்களினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளர்கள், சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தனர். இதனால் அவர்கள் பல்வேறு போக்குவரத்து மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆஸாத்தின் வேண்டுகோளுக்கிணங்க, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அனுமதியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணரின் நேரடிப் பங்களிப்புடன் இச்சேவை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியினால் இந்த விசேட கிளினிக் வைபவ ரீதியாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம். ஆஸாத், நரம்பியல் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எம். பிரியதர்ஷன், சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் எஸ். தர்ஷன் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த விசேட கிளினிக் சேவையினை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் எம்.எச்.எம். ஆஸாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

