மாவடிப்பள்ளி, கிட்டங்கி பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்..!

மாவடிப்பள்ளி, கிட்டங்கி பாலங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்..!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்க சமுத்திரத்தினால் ஒவ்வொரு வெள்ள காலத்திலும் பாரிய நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சு பெரும் நிதிகளை ஒதுக்கி பாலங்களை அமைத்தும் இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பாசன பிரதான வாய்க்கால்களை அகலமாக்க வேண்டிய பொறுப்பு நீர்ப்பாசன அமைச்சுக்கு உள்ளது. எனவே, பாலங்கள் நிர்மாணிக்கப்படும் போது இயற்கையான வடிச்சல்களை சுத்தப்படுத்தி அகலமாக்கும் செயற்பாடுகளை நீர்ப்பாசன அமைச்சு மேற்கொள்ள வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாவடிப்பள்ளி பாலத்தினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிட்டங்கி பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கு கௌரவ அமைச்சர் முக்கியத்துவமளிக்க வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் பிமல் ரத்னாயக்க அவர்களின் தலைமையில் 06.01.2026 ல் பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற போது அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…
அண்மையில் ஏற்பட்ட சூறாவளி வெள்ள அனர்த்தத்தால் அதிகமான பாதிப்புகள் போக்குவரத்து அமைச்சுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும் பாலங்கள், வீதிகள் புனரமைப்புப் பணிகள் உட்பட பல அழிவுகள் ஏற்பட்டு மக்களின் போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டன. இவ்வமைச்சின் அமைச்சர், பிரதி அமைச்சர், அதிகாரிகள் பெரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டனர். குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் இரவு, பகல் பாராது பணி புரிந்தனர். அதற்காக மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் தீகவாபி பிரதேசம் அமைந்துள்ளது. தீகவாபி பிரதேசத்தில் அமைந்துள்ள கலியோடை சந்தி (236 கிராமம்) பாலமுனை வரையிலான 07 கி.மீ வீதி சேதமடைந்துள்ளது. இதனால் தீகவாபி பிரதேச பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, கௌரவ அமைச்சர் இவ்வீதியினை புனரமைப்பு செய்து மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை விடுத்ததுடன் இவ்வீதி தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக
பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்னநாயக்க தீகவாபி பிரதேச வீதி தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தீகவாபி வீதியினை நிரந்தரமாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் அறிக்கைகளை பெறுமாறும் பணிப்புரை வழங்கினார்

Recommended For You

About the Author: admin