யாழ் குருநகரில் போதை கடத்தல் காவாலிகள் இருவர் கைது..!
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்காக சட்டவிரோதமான முறையில் படகில் இந்தியா சென்று வந்த இருவர் (19.11.2025)வியாழக்கிழமை யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில் வைத்து யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் படகில் இந்தியா சென்று வந்ததற்கான ஆதாரத்தை, ஜிபிஎஸ் கருவியின் உதவியுடன் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்தியா சென்று கஞ்சாவுடன் யாழ் நோக்கி படகு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைகப்பெற்ற போதிலும்
மீட்கப்பட்ட படகில் போதைப் பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை எனவும்
கடலுக்குள் வைத்துப் போதைப் பொருட்கள் கைமாற்றப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
அத்துடன், மேற்படி நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டிற்காக குருநகர் கடற்கரைப் பகுதியில் மோட்டார் சைக்கிளுடனும் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து இரண்டு மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட படகின் உரிமையாளர் ஏற்கனவே 300 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் எனவும்
குறித்த குற்றவாளியினுடைய மருமகனே இவ்வாறு இந்தியாவுக்குச் சட்டவிரோதமாகச் சென்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் செயற்பட்ட யாழ்பாண பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மஞ்சுள கருணாரத்ன மற்றும் களு பண்டார ஆகியோரின் தலைமையின் கீழான பொலிஸ் குழுவினரே இந்தக் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கைதான மூன்று சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

