தகுதியை மீறிய வாழ்க்கை முறையால் நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன..!
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன்
தகுதியை மீறிய வாழ்க்கை முறைமைக்கு ஆசைப்பட்டு நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.
கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு இன்று(26.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்,
இலங்கையிலேயே அதிகூடிய நிலையான வைப்புத் தொகை வைத்திருந்தவர்கள் எமது மாகாண மக்களே. நிதியைச் சேமிப்பது தொடர்பிலும், உழைப்புத் தொடர்பிலும் எமது மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். போர்க்காலத்தில் கூட எமது மக்களின் சேமிப்புத்தான் அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் போரின் பின்னர் நிலைமை மாற்றமடைந்துள்ளது.
தற்போது உழைக்கும் பணத்தை முகாமை செய்வதில் தவறிழைக்கின்றனர். தகுதியை மீறிய வாழ்க்கை முறைமைக்கு ஆசைப்பட்டு நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன. எனவே இதனை அறிவூட்டுவதற்கும் இந்த நிகழ்வு உறுதுணையாக இருக்கும்.
அதேநேரம் இங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் என்பன ஏனைய மாகாணங்களில் பின்பற்றும் நடைமுறையையே எமது மாவட்டத்து விவசாயிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களது கடன் கோரிக்கைக்கும் பின்பற்றவேண்டும். அவர்களின் நடைமுறைகளின் இறுக்கம் காரணமாகவே நுண்நிதி நிறுவனங்களை அவர்கள் நாடுகின்றார்கள். எனவே இதனைக் கருத்தில்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றேன், என்றார்.

