இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கது..!
வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன்
எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதும் தேவையானதுமே என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள வட பிராந்திய அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நிதி அறிவியல் மாத நிகழ்வு இன்று(26.09.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து இங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், எமது நாடு நிதி உள்ளடக்கத்தில் கணிசமான முன்னேற்றங்களை கண்டுள்ளது. மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இன்று வங்கிக் கணக்குகளை வைத்திருக்கிறார்கள்.
இருந்தாலும், 2021ஆம் ஆண்டின் நிதியறிவு கணக்கெடுப்பின் படி, நிதி அறிவு திருப்திகரமான நிலையில் இருந்தாலும், நிதி நடத்தையில் இன்னும் பின்தங்கியிருக்கிறது. இந்த இடைவெளி எம்மால் நிரப்பப்பட வேண்டும். நிதியறிவு என்பது வெறும் பணத்தை நிர்வகிப்பதற்கான அறிவல்ல – அது நல்ல வாழ்க்கைத் தரத்துக்குத் துணைபுரியும் அறிவார்ந்த முடிவுகளை எடுக்கக் கூடிய திறனும் நம்பிக்கையும் ஆகும்.
இலங்கை மத்திய வங்கிக்கு நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் சட்டப்பூர்வ பொறுப்பு உள்ளது. அதற்கான உறுதியான அடையாளமாக, நிதி எழுத்தறிவு வரைபடம் (2024–2028) போன்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு, நடுத்தர தொழில் முனைவோரிடையே, நிதி அறிவுக்கும் நடத்தைக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, அதிகாரம் பெற்ற குடிமக்களை உருவாக்குவதாகும்.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகம் இந்த முயற்சிகளில் முக்கிய பங்காற்றி, பிராந்திய தேவைகளுக்கேற்ப நிகழ்ச்சிகள் மற்றும் இணையவழி கருத்தரங்குகள் போன்றவற்றை நடத்தி வருகிறது. இன்றைய பின்லிர் எக்ஸ்போ கூட (FinLit Expo) சமூகத்துக்குத் தேவையான சாதனங்கள் மற்றும் அறிவை வழங்கும் உயிரூட்டும் தளமாக அமைகிறது.
இங்கு கிடைக்கும் அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுங்கள், அமர்வுகளில் பங்கேற்றுப் பயனடையுங்கள், உங்களுடைய சந்தேகங்கள், வினாக்களை கேளுங்கள். நாம் ஒன்றிணைந்து, கிளிநொச்சியிலும் அதற்கு அப்பாலும் ஒவ்வொரு தனிநபரும் குடும்பமும் நிதி நல்வாழ்வை அடையக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம், என்றார்.

