பிரதேசசபையில் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்த உபதவிசாளர்..!
சாவகச்சேரிப் பிரதேசசபையின் உபதவிசாளர் இ.யோகேஸ்வரன் 25/09 வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த சபை அமர்வின் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வீதி புனரமைப்புப் பணியின் போது மக்களின் கோரிக்கை மற்றும் சபையின் முடிவு ஆகியவற்றை கருத்திற்கொள்ளாது தொழில்நுட்ப உத்தியோகத்தர் செயற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய உப தவிசாளர் யோகேஸ்வரன் இப்படிப்பட்ட நிலையில் தனக்கு கௌரவ என்ற பட்டம் தேவையில்லை எனக் கூறி தனது மேசையில் இருந்த பெயர் பதாகையை இரு துண்டங்களாக கிழித்து வீசி எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் ஏனைய சபை உறுப்பினர்களும் சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தருடைய செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தி மனப்பான்மையை வெளியிட்டதுடன் தவிசாளர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட தவிசாளர் குகதாசன் உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


