இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு

இன்று மட்டும் 11 புதிய எலும்புக்கூடுகள் -செம்மணி புதைகுழியில் அகழ்வு : மொத்தம் 101 ஆக உயர்வு!

யாழ்ப்பாணம், ஜூலை 26, 2025: யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து இன்று (சனிக்கிழமை) 11 புதிய மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம், செம்மணி புதைகுழிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

 

நீதிமன்றத்தினால் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என அடையாளப்படுத்தப்பட்ட மனிதப் புதைகுழிகளில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 21வது நாளாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.

 

இன்றைய அகழ்வின் போது, இரண்டு மனிதப் புதைகுழிகளில் இருந்தும் 9 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக மொத்தம் 30 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்துடன் 90 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

 

யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளப்படும் இந்த அகழ்வுப் பணியில், தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோம தேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் தொல்லியல் துறை மாணவர்களும் பங்களிப்புச் செய்கின்றனர்.

 

நாளைய தினமும் அகழ்வுப் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: admin