கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரம் உயர்த்த வேண்டும்..!

கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரம் உயர்த்த வேண்டும்..!

கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் தரமுயர்த்தப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் அமைப்பினர் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;

 

கைதடி மத்திய மருந்தகம் 1952 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ஏ9 வீதியில் யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து அண்ணளவாக 10 கிலோ மீற்றர் தூரத்தில் ஒரு மையப்பகுதியில் கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கிவருகின்றது.

 

சமூகத்தில் விசேட தேவையுடையவர்கள் நிறைந்து வாழும் இப்பிரதேசத்தில் இம்மருத்துவமனை (ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம்) அமைந்துள்ளமையால் அதன் அமைவிடமும், இருப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

இந்தப் பராமரிப்பு நிலையத்தின் சேவை கைதடி முதியோர் இல்லத்தில் உள்ள வயோதிபர்கள், நவீல்ட் விழிப்புலனற்றோர் பாடசாலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளின் காப்பகமான அரச சிறுவர்கள் பராமரிக்கும் இல்லத்தின் குழந்தைகள் என பரந்துள்ளது.

 

மேலும் விழிப்புலனற்றோருக்கான தொழிற்பூங்கா, யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவபீட விடுதி எனப் பலர் இப்பிரதேச மருத்துவமனையை நம்பி வாழ்கின்றனர்.

 

அத்துடன் வடமாகாண ஆயுர்வேத போதனா மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக ஆங்கில மருத்துவமனைகளை நாடும் நோயாளிகள், அருகில் அமைந்துள்ள வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் ஆகியவற்றில் வேலைசெய்யும் அலுவலர்கள் மற்றும் கைதடி, நாவற்குழி, மறவன்புலோ, தச்சன்தோப்பு, கோயிலாக்கண்டி, மட்டுவில், சரசாலை போன்ற கிராமங்களில் வசிக்கும் மக்கள் என மருத்துவமனையின் தேவை அதிகரித்த நிலையில் உள்ளது.

 

ஆகவே கைதடி முதியோர் இல்லத்துக்கு அருகில் உள்ள கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது.

 

கைதடி முதியோர் இல்லத்துக்கு நிரந்தரமான மருத்துவர் மற்றும் பயிற்றப்பட்ட தாதி இல்லாமையால் அங்குள்ளவர்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதுடன் இம்மருத்துவமனையில் நாளாந்தம் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

 

தற்போது இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்ட இடத்தில் வடமாகாண சபையின் பேரவை செயலகம் மற்றும் பிரதம செயலாளர் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பன இயங்குகின்றன. இம்மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு அரசு முயற்சி எடுத்தபோது பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்துக்கு மாற்றீடாக அருகில் இடம் வழங்கி அதில் மருத்துவமனையை கட்டி தருவதுடன் அதனை பிரதேச மருத்துவமனையாக தரமுயர்த்தி தருவோம் என்று வாக்குறுதி வழங்கிய நிலையில் மக்கள் எதிர்ப்புகளை கைவிட்டு இருந்தனர்.

 

ஆனால் வடமாகாண சபையின் பேரவை செயலகத்துக்கு பின்புறமாக மருத்துவமனை கட்டிடம் கட்டி அது வளப்பற்றாக்குறையுடன் இயங்கிவருகின்ற போதும் இன்றுவரை கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையம் வாக்குறுதி அளித்து போல பிரதேச மருத்துவமனையாக தரமுயர்த்தப்படவும் இல்லை.

 

எனவே கைதடி ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை உடனடியாக கைதடி பிரதேச மருத்துவமனையாக தரமுயர்த்த உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என்று மக்களின் சார்பாக இயற்கையின் நண்பர்கள் இயக்கம் கேட்டுக்கொள்கின்றது.என மேலும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: admin