யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி: பணிகளைத் துரிதப்படுத்த மதிவதனி குழுவினர் நேரடி பயணம்!
யாழ்ப்பாண மாநகர மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய மாநகர சபைக் கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையிலான குழுவினர் இன்று நேரடி கள பயணமொன்றை மேற்கொண்டனர்.
இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை முதல்வர் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தனர். ஒப்பந்ததாரர் பிரதிநிதிகள் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) அதிகாரிகள், செலவிடப்பட்ட நிதி மற்றும் இன்னும் எஞ்சியுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினர். எஞ்சிய பணிகளை பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதிப்பற்றாக்குறை மற்றும் இடர்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கட்டுமானப் பணிகளை விரைந்து நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நோக்கில், மேலதிக நிதியை ஒதுக்கீடு செய்யக்கோரி நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் துறைசார் அமைச்சுகளுக்கு விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
யாழ். மாநகரத்தின் அடையாளமாகவும், நிர்வாக மையமாகவும் அமையவுள்ள இந்த பிரம்மாண்ட கட்டடத் தொகுதியை விரைவில் திறப்பதே எமது இலக்காகும்.


