வரணி பொதுச்சந்தையை புனரமைக்க கோரிக்கை..!
கொடிகாமம் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்டு நீண்ட காலமாக எந்தவிதமான புனரமைப்பும் இன்றிக் காணப்படுகின்ற வரணிப் பொதுச் சந்தையை புனரமைத்து மீளக் கட்டியெழுப்புமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வரணிப் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்;
வரணி ஏழு கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட பரந்துபட்ட பிரதேசமாகக் காணப்படுகின்றது.கிட்டத்தட்ட பத்தாயிரம் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர் .இங்கு மத்திய கல்லூரி உட்பட பாடசாலைகள்,பிரதேச வைத்தியசாலை, பொதுச்சந்தை,தபால் நிலையம் ஆகியன காணப்படுகின்ற போதிலும் இவை அனைத்துமே பல தேவைப்பாடுகள் மற்றும் குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றன.
குறிப்பாக சாவகச்சேரிப் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வரணிப் பொதுச்சந்தை பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வருகின்றது.
போதிய இடவசதி காணப்படுகின்ற போதிலும் பாழடைந்த பழைய கட்டடம்,சுற்றுவேலி இன்மை,மீன் சந்தைக் கட்டடம் வியாபாரிகளுக்கு ஏற்ற விதத்தில் இல்லாமை,மரக்கறிகளைப் பாதுகாப்பதற்கான வசதி இல்லாமை,இறைச்சிக்கடை உள்ள போதிலும் அது இயங்காமை உள்ளிட்ட பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு குறைபாடுகளுடன் சந்தை காணப்படுவதனால் வியாபாரிகளும்-அதேநேரம் நுகர்வோரும் மிகக் குறைந்த அளவிலேயே சந்தையை நாடுகின்றனர்.நண்பகல் 12மணியுடன் சந்தை வளாகம் வெறிச்சோடி விடுகின்றது.
இதனால் 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடிகாமம் சந்தை மற்றும் வேறு உள்ளூர் தனியார் வர்த்தக நிலையங்களை பொதுமக்கள் நாடுகின்றனர்.
கடந்த காலங்களில் சாவகச்சேரிப் பிரதேசசபை வரணிச் சந்தையை அபிவிருத்தி செய்ய முயற்சி எடுக்கவில்லை.
தற்போது புதிய சபை அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஒருவர் வரணி முதலாம் வட்டார உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.அவர் சபை ஊடாகவும், அதேநேரம் வேறு வழிகளிலும் சந்தையை அபிவிருத்தி செய்வதாக உறுதியளித்துள்ளார்.
வரணிப் பொதுச் சந்தையை புனரமைத்து பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தும் பட்சத்தில் பிரதேசசபை வருமானத்தை ஈட்ட முடிவதுடன்-கிராம மக்கள் மற்றும் வியாபாரிகளும் பயனடைய முடியும்.
சந்தையானது கொடிகாமம்-பருத்தித்துறை வீதியில் சிறப்பான அமைவிடத்தில் அமைந்துள்ளது.பிரதேசசபைக்கு அதனை உரிய விதத்தில் கையாண்டு வருமானம் ஈட்டவும்-அதேநேரம் மக்களுக்கு சேவையை வழங்கவும் முடியும்.என மேலும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.


