விலை போகாத தளராத முன்னாள் போராளி..!

இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களது அழுத்தங்களையும் தாண்டி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவரும் மீனவ சங்க பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தவிசாளர் தெரிவிற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவுக்கு ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

அத்தோடு இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவரும் முன்னாள் போராளியுமான செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் தலா 3 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழரசுக்கட்சி தலைமை ஈபிடிபி பிரதிநிதியை தவிசாளராக்க முற்பட்ட போதும் அதனை நிராகரித்து முன்னாள் போராளியான செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த அன்னராசாவிற்கு வாக்களித்து வெல்ல வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin