மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்-இராணுவ சிப்பாய் உள்ளடங்களாக மூவர் கைது-பொலிஸார் தெரிவிப்பு.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த  வியாழன் (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய் ஒருவர் உள்ளடங்களாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தில் பணியாற்றும்  சிப்பாய்   மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை வியாழக்கிழமை(16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருந்த நிலையில் விசாரணைகளுக்காக சென்ற சந்தேக நபர்கள் மூவர் உள்ளடங்களாக நான்கு நபர்கள் மீது நீதிமன்றத்திற்கு முன் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது இருவர் உயிரிழந்ததுடன் , மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில்       சந்தேக நபரான இராணுவ சிப்பாய் பேசாலை நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் குறித்த  ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டு  பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து  செல்லப்பட்டு  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI