சிசேரியனின்போது துவாயை வைத்து தைத்த மருத்துவர்கள்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள அரச மருத்துவமனையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது.

அறுவை சிகிச்சையின்போது தவறுதலாக அப் பெண்ணின் வயிற்றில் துவாயை வைத்து தைத்துள்ளனர் மருத்துவர்கள்.

இதையடுத்து அப் பெண் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

எதனால் வயிற்று வலி ஏற்படுகிறது என்று தெரியாத அப் பெண் சுமார் மூன்று மாதங்களாக வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை.

இறுதியாக ஒரு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது அப் பெண்ணின் வயிற்றில் 15×10 சென்ரிமீற்றர் அளவு துவாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் அப் பெண்ணின் வயிற்றிலிருந்த துவாயை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

அதிகமான வயிற்று வலியின் காரணமாக அப் பெண்ணால் சரிவர சாப்பிட முடியாமல் சென்றுள்ளது. இதன் காரணமாக தாய்ப்பால் உற்பத்தி குறைந்து குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கூறுகையில்,

“அறுவை சிகிச்சையின்போது அப் பெண்ணின் வயிற்றிலிருந்து பெரிய அளவிலான துவாய் கண்டுபிடிக்கப்பட்டது. இது அவரது குடலில் சிக்கியிருந்தது.

வலி தாங்க முடியாத அப் பெண் கடந்த 3 மாதங்களில் பல மருந்துகளை உட்கொண்டுள்ளார். இது அவரது உடலிலுள்ள மற்ற உறுப்புக்களையும் பாதித்துள்ளது” என்றார்.

சுமார் ஐந்து மணித்தியாலங்கள் நீடித்த அறுவை சிகிச்சையின் பின்னர் எட்டு நாட்கள் கழித்து குறித்த பெண் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin