கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை மேலும் தீவிரமடைந்து தென்மேல் வங்காள விரிகுடா பிரதேசத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கமானது நாளை (27) சூறாவளியாக வளர்ச்சியடையலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு முகம் கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், மாணவர்கள் எதிர்கொள்ளும் அசெளகரியங்களைக் கருத்திற்கொண்டு பரீட்சைகளை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மாணவர்களின் நலன்கருதி நாளை(27) நாளை மறுநாள் (28) மற்றும் 29ஆம் திகதி ஆகிய மூன்று நாட்களும் எந்தவொரு தேர்வும் நடைபெறாது என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 30 ஆம் திகதி சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படுவதுடன், அன்றைய தினத்திலிருந்து தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள பரீட்சை நேர அட்டவணைக்கு அமைய சாதாரணமாக பரீட்சை நடாத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பரீட்சை நடாத்தப்படாதிருக்கும் 2024 நவம்பர் 27,28,29 ஆகிய தினங்களுக்குரிய பாடப் பரீட்சைகள் 2024 டிசம்பர் 21,22,23ஆகிய தினங்களில் நடாத்தப்படுவதுடன், அதற்குரிய திருத்தப்பட்ட நேர அட்டவணை உரிய காலத்தில் வெளியிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு சிறந்த முறையில் பரீட்சைகளை நடாத்துவதற்கு கல்வி அமைச்சு, பொலிஸார், இராணுவத்தினர் என பலரும் தங்களால் முடிந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார்.