இந்தியா, மராட்டிய மாநிலம், புனேயிலுள்ள கல்லூரியொன்றில், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்று நடந்துள்ளது.
இக் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவி ஒருவர் மிகவும் சோகமாக இருந்துள்ளார்.
இதனைப் பார்த்த மனநல ஆலோசகர்கள் குறித்த மாணவியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
அப்போது, குறித்த மாணவியின் 16 வயது நிரம்பிய தோழியொருவர் 4 இளைஞர்களால் கடந்த 6 மாதங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
சமூக வலைத்தளத்தின் மூலம் நான்கு இளைஞர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் பேசி வந்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டெம்பர் வரை இளைஞர்கள் நால்வரும் சிறுமியை தனித்தனியாக பல இடங்களுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலைச் செய்த நான்கு இளைஞர்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் ஆவர்.
இச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் இது குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 20 மற்றும் 22 வயதான இரண்டு இளைஞர்களை கைது செய்ததுடன் இரண்டு சிறுவர்களையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் அறிமுகமில்லாதவர்களுடன் பழகி, அவர்களின் ஆசைகளுக்கு பலியாகும் பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இவற்றை தடுப்பதற்கான ஒரே வழி சுயபாதுகாப்பு. அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை தவிர்ப்பதனாலும் எச்சரிக்கையுடன் இருப்பதனாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.