இந்திய பிரதமராக மூன்றாவது முறை தெரிவான நரேந்திர மோடியுடன் அவரது அரசாங்கத்தின் அமைச்சரவையும் பொறுப்பேற்றது.
இந்த நிலையில் மோடியின் அமைச்சரவையில் தமிழர்கள் எவரும் இல்லையென்ற குற்றச்சாட்டு தமிழ் நாட்டில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு கடும் எதிர்ப்புகளும் வெளியாகியுள்ளன.
தமிழ் நாட்டை சேர்ந்த மூவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்திருந்தது. ஆனால், இவர்கள் எவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.
வெளியுறவு அமைச்சராக கடந்த அரசாங்கத்தில் செயல்பட்ட எஸ்.ஜெய்சங்கர் இம்முறையும் அதே பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்ட பிராமணர் என்பதுடன், இவர் புதுடில்லியில் பிறந்தவர். தமிழ் பிராமண குடும்பத்தில் வளர்ந்ததாக கூறப்படுகிறது.
இதேவேளை, நிர்மலா சீதாராமன் கர்னாடகாவை பூர்வீகமாக கொண்டவர் என்றும் எல்.முருகன் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் மோடியின் அமைச்சரவையில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் உட்பட பல தமிழர்கள் இருந்தும் பாஜக அவர்களை புறக்கணித்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.