ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
ஜூன் 6 வியாழக்கிழமை முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரையில் இத் தேர்தல் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதன் (ப்ரெக்ஸிட்) பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.
சுமார் 27 உறுப்பு நாடுகளில் இந்த தேர்தல் நடைபெற்றது.
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு நேரடியாக உறுப்பினர்களை தெரிவு செய்ய நடைபெற்ற இந்த தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டன.
முடிவுகளின் அடிப்படையில் தீவிர வலதுசாரிக் கட்சிகள் அதிகமான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மைய வலதுசாரி கட்சியான ஐரோப்பிய மக்கள் கட்சி 186 இடங்களைக் கைப்பற்றின.
தீவிர வலதுசாரி கட்சியான (ECR)73 இடங்களையும் மற்றுமொரு வலதுசாரி கட்சியான (IT)58 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் தீவிர வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு, உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கிறது.
ஹங்கேரி, சுவீடன், பின்லாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளில் தீவிர வலதுசாரி கட்சிகள் நேரடியாகவும் கூட்டணியாகவும் ஆட்சி செலுத்தி வருகின்றன.
இதன்படி ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளின் முன்னேற்றமானது, அகதிகள், சுற்றாடல் போன்ற சர்வதேச விவகாரங்களை ஐரோப்பிய ஒன்றியம் கையாளும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.